Most trusted astrology platform worldwide

onepage-mobile-menu

Explore Our Astrology Insights

Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance

ஐயப்ப பக்தர்கள் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்!

ayyapan pakthargal therinchika vendiya visayangal

எல்லா வருடமும் என்னை தரிசிக்க புதுப்புது பக்தர்கள் நிச்சயம் வருவார்கள். அப்படி எந்த ஆண்டிலாவது புதிய பக்தர் ஒருவர்கூட வரவில்லை என்றால், அந்த வருடம் உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்! சத்தியப் படிகள் மீது நித்திய வாசம் செய்யும் சத்யதர்ம சாஸ்தாவான ஐயப்பன் மாளிகைபுரத்து அம்மனுக்கு அளித்த சத்திய வாக்கு இது.

அன்று முதல் இன்றுவரை காலம்காலமாக சபரிமலையில் கல்யாணக் கனவோடு காத்திருக்கிறாள், மாளிகைபுரத்து அம்மன். ஆனால், ஐயனின் வாக்கினைப் பொய்யாக்கிவிடாமல், ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதுபுதிதாக பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.

அத்தகைய கன்னிசாமிகள்... அதாவது புதிய பக்தர்கள், சிரமம் இல்லாமல் சபரியாத்திரை சென்று. ஐயப்பனை தரிசித்து வருவதற்கான எளிய வழிகாட்டலே இது. அதேசமயம் தங்களுக்கு மாலை அணிவித்துவிடும் குருசாமிகளின் அறிவுரைகளைக் கேட்பதும், அவற்றின்படி செயல்படுவதும் மிகமிக முக்கியம்.

கார்த்திகை மாதம் மாலை அணிந்து...

கார்த்திகை மாதம் பிறக்கும்போதே பல லட்சம் ஐயப்ப பக்தர்கள், துளசிமணி மாலை அணிந்து சபரியாத்திரைக்காக விரதம் இருக்கத் தொடங்கிவிடுவார்கள்.

விரதம் இருக்கும் பக்தர்கள் துளசி மாலை அணியவேண்டும் என்பது ஏன்? அதற்கான காரணம் ஐயப்பன் ஹரி ஹர சுதன். அதாவது சிவவிஷ்ணு மைந்தன்.

மோகினியாக வந்த முகுந்தனும், முக்கண்ணனும் மைந்தனைப் பெற்றெடுத்ததும் அவனை வனத்தின் நடுவே தனியே விட்டுவிட்டுச் சென்றார்கள்.

அப்படிச் சென்றபோது தாயாக விளங்கிய தாமோதரன், சிசுவின் கழுத்தில் துளசிமணிகளால் ஆன மாலை ஒன்றினை அணிவித்து, அதில் சிறிய மணி ஒன்றையும் கோத்துவிட்டான்(ள்). அதனால்தான் துளசி மாலை அணியவேண்டும் என்ற ஐதிகம் வந்ததாகச் சொல்வார்கள். கழுத்தில் மணி அணிவிக்கப்பட்டதால், மணிகண்டன் என்றே முதலில் அழைக்கப்பட்டார். ஐயப்பன்.

அதேசமயம், கார்த்திகை மாதம் மழைக்காலம், மார்கழி மாதம் பனிக்காலம் என்பதால் குளிரும் பனியும் சற்று அதிகமாகவே இருக்கும். மாலை அணிந்த பக்தர்கள் விரத நியமப்படி தினமும் இருவேளை நீராடவேண்டும். இதனால் உடல்நலக்குறைவு எதுவும் வராமல் இருப்பதற்காகவும் துளசிமணி மாலை அணிவது முக்கியமாகிறது. துளசி மென்மையாக வெப்பத்தை வெளிப்படுத்தும் என்பது விஞ்ஞானத்தின்படியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெற்றுத்தரையில்தான் நித்திரை செய்யணுமா?

சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்த நாள் முதல், வெற்றுத் தரையில் தங்கள் வேஷ்டிகளுள் ஒன்றை விரித்து அதில் தூங்குவதுதான், அந்த காலத்தில் பக்தர்களின் வழக்கமாக இருந்தது. அந்தக் காலத்தில் மண் தரை என்பதால், இயல்பாக தட்பவெப்ப நிலை சீராக இருந்தது. ஆனால், தற்காலத்தில் மொசைக் முதல் டைல்ஸ் வரை தரைகள் மாறிவிட்டதால், மெல்லிய ஜமுக்காளம் அல்லது போர்வை ஒன்றினை விரித்துப் படுத்துக்கொள்ளலாம். அதேசமயம் தலையணை, மெத்தை போன்ற வசதிகளைத் தவிர்ப்பது நல்லது.

சபரிமலைப்பாதையில் கட்டாந்தரையில் வெட்ட வெளியில் உறங்குவதற்குப் பழகிக்கொள்வதற்கான விதிமுறையே இது.

சரண கோஷம்

தினமும் இருவேளைக் குளியல் விரத விதிமுறைகளுள் ஒன்று என்பது அநேகமாக எல்லோருக்குமே தெரிந்ததுதான். இது வெப்பமும் தட்பமுமான இருவேறு நிலைகளையும் உடல் தாங்கவேண்டும் என்பதற்கான பயிற்சிமுறையே.

சபரி யாத்திரை செல்லவேண்டுமானால், உடல்நலம் சீராக இருக்கவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் இந்த விதிமுறை. குளிப்பதால் ஏற்படும் குளுமை உடலில் சீராகப் பரவவேண்டும் என்பதற்காகவே சந்தனம் இட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.

உரத்த குரலில் சரணகோஷம் எழுப்பச் சொன்னதன் முதல் காரணம், ஐயப்பனின் திருநாமங்களை அப்படிச் சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்கப் பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும். வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுகளிலோ இருந்தால் அவர்களது கவனமும் ஐயப்பனைப் பற்றிய எண்ணத்தில் திரும்பும்.

அடுத்த காரணம், நம் நன்மைக்கானது. கோஷங்களை உரக்கச் சொல்வதால் குளிர்ச்சியால் ஏற்படும் தொண்டைக்கட்டு வராது. பனிக்காலத்தில் வரக்கூடிய சளித்தொல்லை, சுவாசக் கோளாறுகள் வராது.

தினம் தினம் தீபம் ஏற்றுங்கள்.

குருசாமி கரங்களால் நீங்கள் மாலையணிந்து வந்துவிட்டீர்களா? அன்றைக்கு மாலை நேரத்தில் இருந்து சபரியில் ஐயனை தரிசித்துவிட்டு வரும் வரை தினமும் வீட்டு வாசல்படி ஓரத்தில் விளக்கு ஏற்றி வைக்கவேண்டும். மாலையணிந்த ஐயப்பசாமி மலைக்குப் புறப்பட்டுவிட்டாலும் வீட்டில் உள்ளவர்கள், அவர் திரும்ப வரும் வரை வீட்டு வாசலில் கண்டிப்பாக தினமும் தீபம் ஏற்றிவைக்கவேண்டும்.

சபரிமலைக்குப் போகும் ஐயப்ப பக்தருக்கு அந்த ஜோதிதான் வழிகாட்டுவதாக (ஐயப்பனே ஜோதி ரூபன்தானே!) ஓர் ஐதிகம் உண்டு. சபரி யாத்திரை செய்துவிட்டுத் திரும்பி வரும் ஐயப்பசாமி வீட்டு வாசல்படியில் இருக்கும் ஜோதியை தரிசனம் செய்துவிட்டு, வாசலில் சிதறு தேங்காய் ஒன்றை உடைத்து, சரணகோஷம் செய்து, யாத்திரை நல்லபடி நடக்க அருளிய ஐயப்பனுக்கு நன்றி தெரிவித்துவிட்டே வீட்டுக்குள் நுழைய வேண்டும்.

தினமுமே அதிகாலை சந்தியும், மாலை சந்தியும் கிருமிகள் பரவ ஏற்ற தட்பவெப்பம் நிலவும் நேரம். எனவே, அந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் வெப்ப சலனம் கிருமிகளைத் தடுக்கும். நம்மை ஆரோக்யமாக வைக்கும். நெய்தீபம் ஆக்ஸிஜனை அதிகரிக்கச் செய்யும் என்பதால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராணவாயு) நிறைய கிடைக்கும். அதுவும் நம்மை நலமாக வைத்திருக்கும். இதனால்தான் தினம்தினம் தீபம் ஏற்றச் சொன்னார்கள்.

பிரம்மசரியம் ஏன்?

மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக பிரம்மசரிய விரதம் இருக்கவேண்டும். பெண்களை சகோதரிகளாகவும் தாயாராகவும் நினைக்கவேண்டும். காரணம் ஐயப்பன் பூரண பிரம்மசாரி என்பது ஒரு காரணம். அதோடு, கடுமையான மலையில் ஏறி இறங்கிட உடல் வலு அவசியம். சீரான சுவாசம் தளர்வில்லா நடை என்று எல்லாவற்றுக்காகவும் இந்த விரதம் மிகவும் அவசியம்.

துளசி மாலை அறுந்துபோவது அபசகுனமா?

முதலில் இந்த சந்தேகத்தை முழுமையாக ஒதுக்குங்கள். காரணம், அணிந்திருக்கிற மாலை தரக்குறைவு, தேய்ந்துபோவது, சரியாகக் கோக்கப்படாமலிருப்பது, எதிர்பாராதவிதமாக எதிலாவது சிக்கிக்கொள்வது என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் அறுந்துபோக நேரிடலாம்.

உடனே அதனைப் பெரும் குறையாகவோ ஐயப்பனின் சோதனையாகவோ எண்ணி வருந்தாமல், அதே மாலையினை சரி செய்து அணிந்துகொள்ளலாம். இது எந்த வகையிலும் சுவாமி குற்றம் ஆகாது. மாலையை சரி செய்ய முடியாவிட்டால், மற்றொரு மாலையினை வாங்கி குருசாமியின் கையாலோ அல்லது சுவாமியிடம் வைத்து வேண்டிக்கொண்டோ அணிந்துகொள்ளலாம்.

வீட்டில் உள்ள பெண்களைப் பார்ப்பதும் தவறா?

பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் தவறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது மாலை அணியாத காலகட்டத்திலும் பொருந்தும்.

சபரி யாத்திரை செல்ல மாலை யணிந்த பக்தர்களின் வீட்டிலுள்ள பெண்கள், ஐயப்ப பூஜைக்கு உதவும்விதமாக கோலமிடுவது, விளக்கேற்றுவது, நைவேத்தியங்கள் செய்துதருவது போன்றவற்றைச் செய்யலாம். ஐயப்பன் பாடல்களைப் பாடவும் செய்யலாம்.

மற்றபடி வீண் சர்ச்சைகளைப் பேசுவது, வெளியிடங்களுக்கு அவசியமின்றிச் செல்வது போன்றவற்றைத் தவிர்ப்பதும், எப்போதும் நற்பேச்சு, நற்சிந்தனையுடன் இருப்பதும் நல்லது.

இருமுடியை இஷ்டம்போல் இறக்கிடலாமா?

ஐயப்பன் முதன்முதலில், தானே இருமுடி சுமந்து வழிகாட்டினார். எனவே யாத்திரை நாளில் குருசாமி இருமுடியை உங்கள் தலையில் ஏற்றிவைப்பது முதல், இயன்றவரை அதை இறக்கிவைக்கவே கூடாது. பயணப் பாதையிலும் பக்தியோடு சுமக்கவேண்டும். இருமுடியை சுமப்பதும், இறக்கிவைப்பதும் அவரவரின் குருசாமியின் அறிவுரைப்படியே செய்யவேண்டும்.

எல்லோரையும் சாமி என்று கூப்பிடுவது ஏன்?

தெய்வம் மனுஷ்ய ரூபேண: என்கிறது சான்றோர் வாக்கு. ஐயப்ப வழிபாட்டிலோ மனிதர்கள் மட்டுமன்றி சகலமுமே ஐயப்பன் வடிவம்தான் என்கிறது சாஸ்தா மகாத்மியம்.

அதனால்தான் ஐயப்ப பக்தர்கள் எல்லோரையும் அந்த ஐயப்பனாகவே பாவித்து சாமி என்று அழைக்கிறார்கள். விலங்கு, பறவை போன்றவற்றையும்கூட ஐயப்ப சாமியாகவே பாவிக்கிறார்கள். அப்படியே கூப்பிடுகிறார்கள்.

இதை சூட்சுமமான விஷயம், எல்லோரும் எல்லாமும் தெய்வமே என்கிறபோது உயர்ந்தவர் தாழ்ந்தவர் உள்ளவர் அற்றவர் என்பது உள்ளிட்ட எந்த பேதமும் பக்தர்களுக்கு இடையே எழாது என்பதுதான்.

அறியாமல் செய்யும் தவறுகளுக்கு ஐயப்பன் தண்டிப்பாரா?

ஐயப்பனை வழிபடும் துதியின் இறுதியில் சொல்லப்படும் வாசகத்திலேயே ஐயப்பன் கண்டிப்பாரா என்பதற்கான விளக்கம் இருக்கிறது. தன் பக்தர்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து ரட்சித்து அருள்பவன் ஐயப்பன். எனவே கன்னிசாமிகள் மட்டுமன்றி அனுபவம் மிக்க சாமியாகவே இருந்தாலும் தெரியாமலோ, அறியாமலோ செய்துவிடக்கூடிய தவறுகளுக்காக ஐயப்பன் ஒருபோதும் தண்டிக்க மாட்டார்.

அதேசமயம் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கும், வேண்டுமென்றே செய்யும் தவறுகளுக்கும், பிறருக்குத் துன்பம் தரும் செயல்களுக்கும் மணிகண்டனிடம் மன்னிப்பு கிடைக்காது என்பதே உண்மை.

எனவே எல்லோருக்கும் நல்லவராக - இருங்கள். எப்போதும் ஐயப்பனின் நினைவோடு இருங்கள். நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ எந்த வகையிலும் தவறு செய்யாமல் இருக்க அந்த ஐயனே உதவுவார்.

சபரி யாத்திரைக்கு இத்தனை கட்டாய வழிமுறைகள் ஏன்?

அதற்குக் காரணம், பக்தர்களின் உடலும் உள்ளமும் உறுதியாக இருக்கவும், பக்திப் பாதையில் நடந்து பண்புள்ளவர்களாகவும் அவர்கள் விளங்கவேண்டும் என்பதற்காகவும்தான்.

ஒருமைப்பட்ட மனதால் ஐயப்பனை நினைத்தபடி, பய பக்தியோடு சபரிமலை சென்று ஐயப்பனை வணங்குங்கள்.

சத்தியமான பொன்னுப் பதினெட்டாம் படிகள் மேல் வாழும் அந்த சபரிகிரிவாசன், உங்கள் வாழ்வு பொன்னெனப் பிரகாசிக்க அருள்வான்.

Recent Post






















Categories